கேஜ்ரிவால் ’அப்படி’ சொல்லியிருந்தால் தவறுதான் – கமல் கருத்து !
தமிழக மாணவர்கள் டெல்லியில் படிப்பது பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த கருத்து குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டு போராடி வருகிறார். அப்போது தமிழக மற்றும் பிற மாநில மாணவர்களின் வருகையால் டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை எனக் கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது.
இது குறித்து கெஜ்ரிவாலின் நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் இந்தக் கருத்தைக் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். தமிழகத்திலிருந்து வரும் மாணவர்களுக்கெல்லாம் சீட் கிடைக்கும்போது, டெல்லி மாணவர்களுக்கு சீட் கிடைக்க மறுக்கிறது, அதற்கு காரணம் தனி மாநில அந்தஸ்து இல்லை என்றுதான் அவர் சொல்லியிருப்பார்.தேசிய ஒருமைப்பாட்டை விரும்பும் யாரும் அப்படி பேசியிருக்க மாட்டார்கள். அவ்வாறு அவர் பேசியிருந்தால் அது தவறுதான்’ எனத் தெரிவித்துள்ளார்.