ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (11:05 IST)

அண்ணா மடியில் 3வயதில் உட்கார்ந்தவன் நான்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!

Kamal
உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது அக்காவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் கமல்ஹாசன் மூன்று வயதில் அண்ணா மடியில் உட்கார்ந்து இருந்ததாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையை உலகநாயகன் கமல்ஹாசன் இது குறித்த பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாக கேட்டதும் இல்லை என்கிற குறை. அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.

இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம்  நினைவுக்கு வந்தது. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.

இந்த வீடியோவில் கமல்ஹாசன் சகோதரி கூறியதாவது: நீ மூன்று வயது இருக்கும்போது திடீரென காணாமல் போய்விட்டாய். அப்போது அருகில் நடந்து கொண்டிருந்த திமுக கூட்டத்திற்கு நீ சென்றதாகவும் அங்கு அண்ணா மடியில் போய் உட்கார்ந்து கொண்டதாகவும் நமது அப்பாவின் உதவியாளர் உன்னை அழைத்துக் கொண்டு வந்தார்.

அண்ணாவின் மடியில் உட்கார்ந்ததாலோ என்னவோ நீ எப்போதும் அண்ணா போலவே பேசிக் கொண்டிருக்கிறாய் என அம்மா கூட அடிக்கடி சொல்வார்கள் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Edited by Siva