சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்: இணைய துண்டிப்புக்கு கமல் ஆவேசம்
தூத்துகுடியில் நேற்றும் இன்றும் காவல்துறையினர்கள் கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 12 பேர் பலியாகினர். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், கலவரம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து இணையம் வழியாக செல்லாமல் இருக்கவும், தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இணையம் துண்டிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமத்தில் உள்ளன.
இந்த நிலையில் இணைய துண்டிப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை' என்று கூறியுள்ளார்.