செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (12:15 IST)

திமுகவின் ஊதுகுழலாக கமலஹாசன் வலம் வருகிறார்! – செல்லூர் ராஜூ விமர்சனம்!

Sellur Raju
மதுரை பரவை அருகே ஊர்மெச்சிகுளம் பகுதியில் தன் மகன், தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.


 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ:

சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டி காட்டிய நிலையில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னெச்சரிக்கையாக அனைத்துயுமே மக்களுக்கு செய்துவிட்டோம் என அமைச்சர்கள் சொல்லி, சொல்லி கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டனர்.

திமுக அமைச்சர்கள் முதமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் உடமைகளை சொத்துக்களை மக்கள் இழந்துவிட்டனர்.

பல ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத மழை சென்னையில் பெய்தது. அதிமுக ஆட்சியில் வர்தா, கஜா புயல்களை எதிர்க்கொண்டோம்.
இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிதியை கொடுத்தோம்.  நிவாரண பொருட்களை அள்ளி கொடுத்தோம்.

யாரையும் கட்டாயப்படுத்தி நிவாரண நிதி பெறவில்லை. வரும் நிதியை வைத்து மக்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். மழைக்காலத்தில் ஒரு இராணுவ தளபதியை போல் ஜெயலலிதா செயலாற்றினார்.

திமுக அரசு 6000 உதவிதொகையை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையை கொடுக்கும் அரசு அதிகாரிகள் பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி செய்ய வேண்டும்.

வேளச்சேரியில் உள்ள நிலைமை ரத்தக்கண்ணீரை வரவழைத்தது. இறந்தவர்களுக்கு 5 லட்சம் கொடுப்பது மிகக்குறைவான தொகை, 10 லட்சமாவது இழப்பீடு கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் செயலிழந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. சென்னையின் நிலைமைக்கு திமுக அரசு தான் முழு பொறுப்பு.

கமலஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது.தேர்தலில் ஒரு சீட்டுக்காக திமுகவிற்கு லாலி பாடுகிறார். திமுகவின் ஊதுகுழலாக கமலஹாசன் உள்ளார்.

கமலஹாசன் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்க மாட்டார்கள். கமலஹாசன் திமுகவிற்கு ஆதரவாக பேசினால் இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகுவர். அவர் நிழல் கூட அவருடன் இருக்காது.

துன்பத்தில் சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமலஹாசன் பேசவில்லை. கமலஹாசன் தான் தற்போது பதுங்கு குழியில் இருந்து  வெளி வந்துள்ளார். அரசியல் நாகரிகமற்றவர் கமலஹாசன். மதுரையில் கட்சி தொடங்கி வீராப்போடு பேசிய கமலஹாசனின் வீராப்பு  எங்கே சென்றது. விஜய் எங்களுக்கு போட்டி என்றெல்லாம் சொல்லக்கூடாது.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களின் விருப்பம். விஜய் ஒரு இளைஞர். அவர் வருவதால் ஒன்றும் இல்லை.

நான் விஜயின் ஊதுகுழல் இல்லை. விஜய் எங்களுக்கு மாற்றும் இல்லை. அவர் ஒரு இளைஞர் என்பதால் குறிப்பிட்டு சொல்கிறேன். யார் யாரோ அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அதனால் இதனை கூறுகிறேன் என பேசினார்.