'காலா' சமூக கருத்துள்ள படம்: தமிழிசை செளந்தர்ரராஜன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், எதிர்ப்புகளுடனும் இன்று வெளியாகியது. இந்த படத்திற்கு பெரும்பாலானோர் நேர்மறை விமர்சனங்களையும் ரஜினியை பிடிக்காத ஒருசிலர் மட்டும் எதிர்மறை விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் 'காலா' திரைப்படத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்தார். படம் பார்த்து முடித்த பின்னர் 'காலா' திரைப்படத்தில் நல்ல சமூக கருத்துக்கள் இருப்பதாகவும், அதனால் இந்த படத்தை பார்த்ததாகவும் கூறினார். மேலும் திரைப்படத்தை அரசியலுடன் இணைத்து பார்க்க கூடாது என்றும், அவ்வாறு இணைத்து பார்த்தால் பிரிவைத்தான் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்
இதே தமிழிசை செளந்திரராஜன் தான் தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெளியானபோது பாஜக அரசின் கொள்கைகளை தவறாக அந்த படத்தில் காண்பித்திருப்பதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.