நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்வதே தங்கள் லட்சியம் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசமாக சூளுரைத்துள்ளார்.
பா.ஜ.க.வை 'கொள்கை எதிரி' என விஜய் விமர்சித்த நிலையில், நயினார் நாகேந்திரன் பதிலுக்கு "விஜய் கவுன்சிலர் தேர்தலில்கூட போட்டியிட்டதில்லை" என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரோட்டில் செங்கோட்டையன் பேசினார்.
"நயினார் நாகேந்திரன் எங்கே நின்றாலும் அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என இளைஞர்கள் பாடம் புகட்ட வேண்டும்" என்று அவர் கூறினார். மேலும், "விஜய் 234 தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்" என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான செங்கோட்டையன், கடந்த மாதம் தான் தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. மற்றும் தவெகவுக்கு இடையேயான வார்த்தை போர் தற்போது சூடுபிடித்துள்ளது.
Edited by Mahendran