சங்கர் கொலையை நியாயப்படுத்திய 2 பேருக்கு அடி உதை
உடுமலைப்பேட்டை சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசிய 2 பேரை பொதுமக்கள் திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் அடித்து உதைத்தனர்.
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பொதுமக்கள் அதிகளவில் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உடுமலை சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசியதாக 2 பேரை பொதுமக்கள் தாக்கினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட இருவரும் வழக்கு விசாரணையின் வாதத்தின் போது கொலையை நியாயப்படுத்தி பேசியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட இருவரையும் காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் தற்போது தீர்ப்பு வெளியானதை அடுத்து மக்கள் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் உள்ளதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.