திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (12:56 IST)

வன்முறையை தூண்டும் கனல் கண்ணன்? நடவடிக்கை இல்லை? – அதிமுக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Jayakumar
சமீபத்தில் பாஜக நிர்வாகி கனல் கண்ணன் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பின்னர் உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டாலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே அதிமுகவினர் ஆதரவளித்தனர்.

சமீபத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் பாஜக நிர்வாகியுமான கனல் கண்ணன் பாஜக கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணி கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.