திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : சனி, 9 ஆகஸ்ட் 2014 (15:00 IST)

4,000 ஏக்கரில் மரக் கன்றுகள் மற்றும் பழக் கன்றுகள் வளர்க்கத் திட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 2014 ஆகஸ்டு 8ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது:
 
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்த எனது தலைமையிலான அரசு, ஊரகப் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. 
 
நடப்பாண்டில், ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்களை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
 
1. கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக விளங்கும் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயலாற்றும் எனது அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகளை அமைத்தல், கைப் பம்பு மற்றும் சிறு மின் விசைப் பம்புகள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள குடிநீர் ஆதாரங்களைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், 40 கோடி ரூபாய் செலவில் 1,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், 45 கோடி ரூபாய் செலவில் 3,000 சிறு மின் விசைப் பம்புகள் அமைத்தல், 6 கோடி ரூபாய் செலவில் 1,000 கைப் பம்புகள் அமைத்தல், 10 கோடி ரூபாய் செலவில் பழுதாகியுள்ள 10,000 ஆழ்துளைக் கிணறுகளை புனரமைத்தல் என மொத்தம் 101 கோடி ரூபாய் செலவில் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும். 
 
2. சுகாதாரமான கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், கிராமங்களைச் சுகாதாரமாகவும் தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில், 44 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 12,524 கிராம ஊராட்சிகளுக்கும், குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக 17,638 மூன்று சக்கர மிதி வண்டிகள் வழங்கப்படும். இதன்படி, மக்கள் தொகை 3,000-க்குக் குறைவாக உள்ள கிராம ஊராட்சிகளுக்குத் தலா ஒரு வண்டியும், மக்கள் தொகை 3,001 முதல் 10,000 வரை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தலா இரண்டு வண்டிகளும்; மக்கள் தொகை 10,000-த்திற்கு மேல் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தலா மூன்று வண்டிகளும் வழங்கப்படும். 
 
3. கிராம ஊராட்சிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், பழுதடைந்த 500 கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாகப் பொதுமக்கள் வந்து செல்லவும், மன்றக் கூட்டங்கள் நடத்தவும், தளவாடப் பொருட்கள் வைக்கவும் ஏற்றவாறு போதிய இட வசதியுடன் கூடிய புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 
 
4. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில், ஊட்டச்சத்து, முன்பருவக் கல்வி, சுகாதார கல்வி, நோய்தடுப்பு, உடல்நல பரிசோதனை போன்றவற்றைப் பொது சுகாதாரத் துறைகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுவதை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இம்முயற்சிக்கு மேலும் வலுவூட்டும் வகையிலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு சுகாதாரமான சூழ்நிலையினை அளிக்கும் வகையிலும் 3,000 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 

5. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சொத்துக்களான சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள், அங்கன்வாடி கட்டடங்கள், நூலகங்கள் போன்றவற்றைப் பராமரித்திட மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் 557 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் 92,031 ஊரகச் சொத்துகளைச் சீரமைத்து, மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளிலுள்ள 40,680 ஊரகச் சொத்துக்கள் 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். 
 
6. அரசு சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், வரிகளைச் செலுத்துவதற்கான வசதிகள் மற்றும் பல்வேறு வகையான சமூகப் பாதுகாப்பு உதவிகள் பெறுவதற்கான வசதிகள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை வழங்கும் சேவை மையங்களாகக் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் திகழ வேண்டும் என்பதே எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடையும் வகையில், 4,460 கிராம ஊராட்சி சேவை மையங்கள் 648 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இதே போன்று, 150 வட்டார ஊராட்சி சேவை மையங்கள் 45 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 
 
7. சமுதாய அமைப்பான, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் உரிய அதிகாரம் பெற்று, அவற்றை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதை எனது தலைமையிலான அரசு குறிக்கோளாய்க் கொண்டுள்ளது. வறுமையைக் குறைக்கும் முயற்சியாக, சமுதாய முதலீட்டு நிதி 10 லட்சம் ரூபாய் ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கும் வழங்கப்படுகிறது. 2013-2014ஆம் ஆண்டில், முதல் கட்டமாக அமைக்கப்பட்ட 2,323 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதியாக 232 கோடி ரூபாய் எனது அரசால் அனுமதிக்கப்பட்டது. 2014-2015ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டமாக எடுக்கப்பட்டுள்ள 3,491 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 349 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி ஆதாரங்கள் மூலம் 5.9 லட்சம் குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும். 
 
8. ஊரகப் பகுதிகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் சிறிய அளவில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட / பழங்குடியின, சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூடுதல் வருவாய்க்கு வழி ஏற்படுத்தித் தரும் வகையிலும், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை மற்றும் தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் மரக் கன்றுகள் மற்றும் பழக் கன்றுகள் வளர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 62 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் 37.54 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்படும். 
 
9. விவசாயப் பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களைப் பாதுகாக்கப் போதிய சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தும் வகையில், 2014-2015ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 385 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்திற்கு ஒரு உணவு தானிய சேமிப்பு கிடங்கு என்ற விகிதத்தில், 385 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், தலா 8 லட்சம் ரூபாய் வீதத்தில் 30 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 
 
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், கிராமங்கள் மேம்படவும், கிராம மக்கள் வளம் பெறவும், அதன் மூலம் தமிழ்நாடு பல வகையில் முன்னேற்றம் அடையவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா உரையாற்றினார்.