தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
எல்லாவற்றுக்கும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக, எதற்காக விகே பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? என்றும், ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி தமிழினத்தையே பாஜக அவமதித்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியதாவது:
ஒரு மனிதனை இனத்தாலும், மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது.
கடந்தாண்டு இதே நாளில் ஒடிசா ரயில் விபத்தின் போது இதே வி.கே.பாண்டியன் தான் படுகாயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்.
தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது. ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. தமிழினம் பற்றியும், தமிழர்கள் பற்றியும் பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை;
ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது என ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran