செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (15:36 IST)

இதெல்லாம் ஒரு ரோடா? குண்டும் குழியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்!

Protest
சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தை அடுத்துள்ள நல்லதாதுநாயக்கன்பட்டி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் முறையான சாலை, குடிநீர், வடிகால் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக உசிலம்பட்டி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இந்த கிராமத்தின் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுவதோடு, சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் கிராம மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து சேடபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சேறும் சகதியுமான சாலையில் தங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கு போர்க்கால அடிப்படையில் விரைவில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.