செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (17:50 IST)

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

2020ம் ஆண்டிற்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில், 1997 ஆம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தின கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் சத்தியா. இவர் பணி வரைமுறை செய்ய வேண்டும் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.  அந்த உத்தரவு அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த அறிக்கையில், தற்காலிக பணியாளர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த  அனைத்து தற்காலிக ஊழியர்களும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran