வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வியாழன், 4 டிசம்பர் 2025 (22:08 IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியும் தற்போது வரை அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடினார். கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற  அனுமதி அளிக்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றலாம். CISF வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் அங்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
இதையடுத்து இந்து முன்னணி இயக்குனர்கள் பலரும் தீபம் ஏற்ற சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. 144 தடை உத்தரவு இருப்பதால் அவர்களை அனுமதிக்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர். ஆனால், அதை மீறி இந்து முன்னணி இயக்கத்தினர் மேலே செல்ல முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அதன்பின் பலரையும் போலீசார் கைது செய்தார்கள்.
 
ஒருபக்கம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு சார்பில் நேற்று இரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று மதியம் விசாரித்த இரட்டை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்தனர். இதையடுத்து இன்று இரவுக்குள் திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி சுவாமிநாதன் எச்சரித்தார்.
 
எனவே மீண்டும் இந்து முன்னணி இயக்குனர் அங்கு தீபம் ஏற்ற சென்றனர். ஆனால் இந்த முறையும் போலீசார் தடுத்தனர். தமிழக அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதால் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என போலீசார் சொல்ல இந்து முன்னணி அமைப்பினர் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலரையும் போலீசார் கைது செய்தனர்.
 
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.  இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.