புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (10:12 IST)

முறைகேடாக செயல்படும் சுங்கச்சாவடி..! 10 ஆண்டுகளாக கட்டணம் வசூல்.! கண்டு கொள்ளாத அதிகாரிகள்.!!

tool gate
கரூர் அருகே மணவாசி சுங்கச்சாவடி முறைகேடாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுவதாக கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சுங்கச்சாவடி ஊழியர்களே முறையான ஆவணங்களை காட்டி 4 வழிச்சாலையை முடிக்காமல் செயல்படுவதாக ஒப்புக்கொண்டனர். 
 
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி அருகே சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சாலை சுங்காலியூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைத்து தான் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கின்ற அரசாணை உள்ளது. 
 
ஆனால், அதனை மறைத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
இந்நிலையில்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொறுப்பாளர்கள் சுங்கச்சாவடி மேலாளரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டனர். அப்போது ஆவணங்களை சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் எடுத்து வந்து காண்பித்துள்ளனர். 
 
அதில் சுக்காலியூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், மாயனூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சுங்கச் சாவடியில் சுங்கம் வசூலிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
toll protest
இதன் காரணமாக சுங்கச் சாவடியிலிருந்து 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடம்,  அரசாணையை படி சுங்கச் சாவடி செயல்பட வேண்டும் என்றும் சாலைகளை அமைத்து விட்டு சுங்கம் வசூலிக்கட்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

 
பிறகு சுங்கச்சாவடி ஊழியர்கள் பலரிடமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் சுங்க கட்டணம் வசூலிக்காமல் அனைத்து வாகனங்களும் கடந்து சென்றன. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.