1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (10:07 IST)

எலி காய்ச்சலால் குழந்தைகளை இழந்துவிடுவோமோ! கதறும் தாய்மார்கள்..!

FEVER
உசிலம்பட்டி அருகே குழந்தைகளுக்கு பரவி வரும் மர்ம காய்ச்சல், எலி காய்ச்சல் என்றும் எலி காய்ச்சலுக்கு தங்கள் குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கதறுகின்றனர்.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில் 3 வயது ஆண் குழந்தை ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.,
 
இந்நிலையில் அடுத்தடுத்து பரவிய மர்ம காய்ச்சலால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
doctor
இந்த காய்ச்சல் குறித்து அறிந்து கொள்ள குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவர்களுக்கு இந்த காய்ச்சல் எலிக் காய்ச்சல் என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். 
 
மேலும் எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில் குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மூலம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். எலி காய்ச்சல் பரவிய குழந்தைகளுக்கு, ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம் என்றும் மணிவண்ணன் தெரிவித்தார்.
 
mla
இதனிடையே மருத்துவமனைக்கு நேரில் சென்ற உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து அதிநவீன சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், இந்த காய்ச்சல் பரவாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சிறப்பு முகாம்களை நடத்தி மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
people suffer
எலி காய்ச்சலுக்கு தங்கள் குழந்தைகளை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக தாய்மார்கள் கதறுகின்றனர். தங்கள் கிராமத்தில் மருத்துவ முகாம்களை அமைத்து எலி காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் வேலாயி வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.