வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:25 IST)

காதலியைத் தன்னோடு அனுப்புமாறு கணவனிடம் கேட்ட இளைஞர் – பிறகு நடந்த விபரீதம் !

திருப்பூரில் காதலியை தன்னுடன் அனுப்புமாறு கணவனிடமே கேட்ட இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவருக்கும் அதேப் பகுதியில் இருக்கும் ரம்யாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்தக் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்து ரம்யாவுக்கு திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

காதல் தோல்வியால் விரக்தியடைந்த கேசவமூர்த்தியும் சிங்கப்பூர் சென்று வேலைப்பார்த்து வந்துள்ளார். ஆனாலும் பழையக் காதலை மறக்க முடியாமல் நாட்டுக்கு திரும்பி வரும் போதெல்லாம் திருப்பூருக்கு சென்று தனது காதலியை சந்தித்துள்ளார். ஒருக் கட்டத்தில் வெளிநாட்டு வேலையை நிரந்தரமாக விட்டுவிட்டு வந்த கேசவமூர்த்தி, காதலியின் கணவர் பிரகாஷ் வேலைப் பார்க்கும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பிரகாஷோடு நட்பாகப் பழக ஆரம்பித்துள்ளார்.

இந்த நட்பு இருவரும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளது. இதையடுத்து ஒரு நாள் மது குடித்துக் கொண்டிருக்கும் போது பிரகாஷிடம் உன் மனைவியும் நானும் காதலர்கள் என்றும் அவளை நான் என்னோடு அழைத்து செல்லப் போகிறேன் எனவும் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பிரகாஷ், கேசவமூர்த்தியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த கேசவமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.