கள்ளக்காதலுக்கு தடை ; காதலனை வைத்து கணவனை கொலை செய்த பத்தினி
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் காந்தி புரத்தில் வசிப்பவர் முருகன்(44). அவர் அந்த பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு 9 மணியளவில் தனது கடையை பூட்டி விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அந்நிலையில் நேற்று காலை அந்த ஊரின் காட்டுப் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டும், கல்லாய் முகம் சிதைக்கப்பட்டும் அவர் பிணமாக கிடந்துள்ளார்.
எனவே, இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், முருகனின் தம்பி சரவணன் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், முருகனின் கடையில் காசி(19) என்பவர் வேலை பார்த்து வந்ததாகவும், அவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருந்ததால் அவரை முருகன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார் எனவும், எனவே, காசி மீதுதான் தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, தலைமறைவாக இருந்த காசியை போலீசார் தேடி வந்தனர். அந்நிலையில் நேற்று இரவு ஒரு இடத்தில் பதுங்கியிருந்த காசி மற்றும் அவரது நண்பர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, கள்ளக்காதல் பிரச்சனையே முருகனின் கொலைக்கு காரணம் என தெரிய வந்தது.
அதாவது, முருகனின் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, காசிக்கும் முருகனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் முருகனுக்கு தெரிய வந்ததும், மனைவியை கண்டித்து விட்டு, காசியையும் வேலையை விட்டு அனுப்பிவிட்டார். எனவே, முருகனின் மனைவியை காசியால் சந்திக்க முடியாமல் போனது. அதன்பின் ஒரு சந்திப்பில், எனது கணவர் உயிரோடு இருக்கும் வரை நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. அவரை கொலை செய்து விடு என முருகனின் மனைவி காசியிடம் கூறியுள்ளார்.
எனவே, கடந்த 4ம் தேதி இரவு, வெளியே சென்ற முருகனை மதுகுடிக்க அழைத்து செல்வது போல் நடித்த காசி, திருச்செந்தூர் மையவாடி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக முருகனின் மனைவியிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.