வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (09:22 IST)

முதியவரை உல்லாசத்துக்கு அழைத்த ஓரின சேர்க்கை இளைஞர்! – மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்!

தேனியில் ஓரின சேர்க்கைக்கு உடன்படாததால் 70 வயது முதியவரை இளைஞர் ஒருவர் கொன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியக்குளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான முதியவர் பொன்ராம். இரண்டு நாட்கள் முன்னதாக வீட்டில் உறங்கி கொண்டிருந்த பொன்ராம் காலையில் சடலமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொன்ராமின் மகள் மாரியம்மாள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்ததில் பொன்ராம் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் 26 வயதான அருண்குமார் என்ற இளைஞரை போலீஸார் விசாரித்துள்ளனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. ஓரின சேர்க்கையாளரான அருண்குமார் தனது நண்பர் ஒருவருடன் அடிக்கடி பொன்ராமின் வீட்டுக்கு அருகே உள்ள மறைவான ஒரு இடத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார், சமீபத்தில் நண்பர் திருமணம் ஆகி சென்றுவிடவே தனிமையில் தவித்து வந்த அருண்குமார், சம்பவத்தன்று மது போதையில் முதியவர் பொன்ராமை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.

இதனால் பொன்ராம் கூச்சலிடவே அவரது கழுத்தை நெறித்து கொன்ற அருண்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் அருண்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.