திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 டிசம்பர் 2018 (13:01 IST)

அதிரவைக்கும் அவலங்கள்: சாத்தூரை போல் சென்னையிலும் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்

சாத்தூரைப் போல சென்னையிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்றும் அவர்களின் அலட்சியத்தால் இரண்டு உயிர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்மந்தமாக 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அரசு வேலை கொடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, 4 மாத கர்ப்பிணியாக இருந்த போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. 
பின்னர் அவரது 8வது மாதத்தின் போது நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோன அவர் இதுகுறித்து கேட்டபோது  ரத்தம் ஏற்றும் போது தொற்று வந்து இருக்கலாம் என மருத்துவர்கள் அசால்ட்டாக கூறியுள்ளனர்.  
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் தனது உறவினர்கள் அனைவரும் தன்னை ஒதுக்கிவைத்துவிட்டனர் எனவும் அந்த பெண் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.