கருக்கலைப்பு காலவரம்பை உயர்த்த வேண்டும் – நீதிமன்றம் பரிந்துரை !
குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க கருக்கலைப்பு செய்யும் காலவரம்பை 24 வாரமாக உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கருக்கலைப்பு செய்ய காலவரம்பாக 20 வாரங்கள் என நிர்னயிக்கப்பட்டுள்ளது. 20 மேலுள்ள கருவைக் கலைக்க நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கவேண்டும். ஆனால் கருவின் குறைபாடுகளை அறிய 20 வாரங்கள் என்பது சரியான காலம் அல்ல என்றும் 20 வாரங்களுக்குப் பிறகே கருவின் குறைபாடுகளை அறிய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது சம்மந்தமாக செய்திதாள் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை வைத்து நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. இது சம்மந்தமாக நீதிபதிகள் வெளியிட்டுள்ள தீர்ப்பில் ‘இந்தியாவில் ஆண்டுக்கு 2.7 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 17 லட்சம் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதைத் தடுக்க கருக்கலைப்பு செய்யும் கால அளவை 24 வாரமாக உயர்த்த வேண்டியது அவசியம்’ எனக் கூறியுள்ளனர்.
எனவே மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் 1971 –ல் உள்ள கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பில் திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 24 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளது.