1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (13:38 IST)

முதல்வரோடு டாக்டர் பட்டம் வாங்கிய பிரபல இசையமைப்பாளார்!

எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டபோதே, தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஒருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 28 பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கூடவே தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் டாக்டர் பட்டத்தை பல்கலைகழக வேந்தர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் வழங்கினார்.

கௌதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ படத்திற்கு இசையமைத்து பிரபலமடைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். முதலமைச்சருக்கும், ஹாரிஸ் ஜெயராஜுக்கும் ஒரே மேடையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது ஹாரிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் டாக்டர் பட்ட சான்றிதழை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். தான் பட்டம் பெற்றது குறித்து முதல்வரும் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.