என்னுடைய பெயர் எடப்பாடி: எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் திமிர் பேச்சு!
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் விகடன் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேமராவை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான ரூ.32.84 லட்சம் நிதி முறைகேடு செய்யப்பட்டதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரரும் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்து வந்தவருமான சுந்தர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக பணி ஓய்வு பெறும் அன்று எச்.சுந்தர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக சுந்தர் உள்ளிட்ட 21 பேர் திருச்சி ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விகடன் பத்திரிக்கையாளர் மணிகண்டனை நோக்கி ஆவேசமாக வந்த எச்.சுந்தர் அவரைத் தாக்கி கேமராவை பறிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த பத்திரிக்கையாளர் உங்கள் பெயர் என்ன எனக் கேட்டபோது தன்னுடைய பெயர் எடப்பாடி என கூறிக்கொண்டு திமிராக அங்கிருந்து சென்றுள்ளார்.