வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (09:03 IST)

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி.இழப்பீடு ஒதுக்கீடு..ஜெயகுமார் பேட்டி

மத்திய அரசு ரூ.1,898 கோடியை தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை 37 முறை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 38 ஆவது கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டங்களில் பங்குப்பெற்று வரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள 38 ஆவது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெற டெல்லி வந்த அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையில் இருந்து தமிழகத்திற்கு ரூ.1,898 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது, பாக்கி இழப்பீடு தொகையை பெற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையாக ரூ.4,072.03 கோடியும், ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.3,236.32 கோடியும் மத்திய அரசு வழங்கவேண்டியுள்ள நிலையில், இந்த 2 தொகைகளையும் மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என 38 ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த இருப்பதாகவும், அப்பேட்டியில் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.