நாளை குரூப் 4 தேர்வு.! 6000 பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி..!
காலியாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கி பிப். 28-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்து தேர்வு நாளை (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலை கிடைப்பது உறுதி. குரூப்-4 தேர்வை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.