1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 8 ஜூன் 2024 (12:44 IST)

நாளை பதவியேற்பு விழா.! ட்ரோன்கள் பறக்க தடை.! டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு.!!

Modi President
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது  ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7.15மணி அளவில் நடைபெறும் விழாவில், மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். 

இதையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகள் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வர பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படுகிறது. அந்தப் பாதை முழுவதும் ஸ்நைப்பர்களும், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Police
நகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஓட்டல்கள் லீலா, தாஜ், ஐடிசி மவுரியா, க்ளாரிட்ஜெஸ், ஓபராய் ஆகியன பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள், உத்திகள் படைப் பிரிவான ஸ்வாட் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

2500 காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை ஒட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 
 
நகரின் பல பகுதிகளில் இருந்தும் மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.