வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (14:50 IST)

ஒ.பி.எஸ்-க்கு இறைவனே தண்டனை வழங்கியுள்ளார் - ஜெயகுமார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை   அதிமுகவில் இருந்து  நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற  நிலையில், ‘’கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  ஓபிஎஸ், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதில்,  ‘அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது என்று  ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:

நியாயமான நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.  அதிமுக தொண்டர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில், குழப்பத்தை ஏற்படுத்தி, குளிர்காய நினைக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தகுந்த தண்டனையை இறைவனே வழங்கியுள்ளார்’’என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடில் இருந்து வரும் ஓபிஎஸ், தற்போது டிடிவி, தினகரனுடன் இணைந்து அரசியலில் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.