1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (11:28 IST)

அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..! ஓபிஎஸ் மனு தள்ளுபடி.! சின்னம், கொடி பயன்படுத்த தடை.!!

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக்கூறி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதித்த தனி நீதிபதி இடைக்கால உத்தரவை எதிர்த்து அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு விசாரித்தது.

highcourt
தகுதி நீக்கம் செல்லும் என்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
 
கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.  அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி,  ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.