கங்குலி பாஜகவில் சேர மறுத்ததால் அவர் நீக்கப்பட்டார்! – ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனந்த் சீனிவாசன் வாரிசு அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு ஜெய்ஷா குறித்து விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டபோது, அப்படியான எந்த விஷயங்களும் நடக்கவில்லை என்றும், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி, 40 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும். இதுகுறித்து விரைவில் இரண்டு கட்சி மேலிடமும் அறிவிப்பார்கள் என்றார்.
திமுகவில் வாரிசு அரசியல் நடப்பதாக பாஜகவினர் கூறுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு “சமீபத்தில் பாஜகவுக்கு குதிரை பேரத்தில் தாவிய ஜோதிராதித்ய சிந்தியா வாரிசு கிடையாதா? அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐ செக்ரட்டரியாக இருக்கிறார். அவர் எந்த டெஸ்ட் மேட்ச் விளையாடினார்? குறைந்தது குஜராத் அணிக்காக அல்லது ராஜ்கோட் அளவிலாவது விளையாடினாரா? இப்போது பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி உள்ளார். அவரை பொம்மை போல அந்த பதவியில் வைத்துவிட்டு ஜெய்ஷா தன்னைதான் முன்னிறுத்திக் கொள்கிறார்.
சவுரவ் கங்குலி போன்ற திறமையான இந்திய கிரிக்கெட் வீரரை வெளியேற்றிவிட்டு ஜெய்ஷாவை போட்டுள்ளார்கள். ஏனென்றால் கங்குலி பாஜகவில் சேர மறுத்துவிட்டார்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K