செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (07:21 IST)

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: பரபரப்பில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 28ஆம் தேதி முதல் நடைபெறும் என ஏற்கனவே சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
தமிழக சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரி மாதம் 8ந் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீது நான்கு நாட்கள் விவாதம் நடைபெற்றது. அதனையடுத்து பல்வேறு மானியக்கோரிக்கை மீது விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் அந்தந்த துறை அமைச்சர்கள் உறுப்பினர்கள் கேட்கும் கேளிகளுக்கு பதிலளிப்பார்கள். மேலும் சட்டப்பேரவையில் இன்று முதல் நிகழ்வாக, முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பின்னர் பேரவை ஒத்திவைக்கப்படும்.
 
மேலும் ஜூலை 1ஆம் தேதி திமுகவின் சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வர திமுக தற்போதைய நிலையில் ஆர்வமில்லாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது