புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (18:30 IST)

திமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச்செல்வன்! பிரமாண்ட விழா நடத்த திட்டம்?

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கொண்டே அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்த தங்க தமிழ்ச்செல்வன், விரைவில் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி அவரை திமுக பக்கம் இழுக்க செய்த முயற்சிகள் பலனளித்ததன் விளைவாக தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாகவும் இதனையடுத்து தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள், தேனியில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருப்பதாகவும், நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் தங்க தமிழ்செல்வன் தன்னை இணைத்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்த பின்னர் தேனியில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் செல்வாக்கு காரணமாக திமுக அங்கு பலவீனமாக இருப்பதால் கரூரை செந்தில் பாலாஜி தேற்றியதை போல் தேனியை தங்க தமிழ்செல்வன் தேற்றுவார் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.