ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (22:18 IST)

மீனவர்கள் கைது.! முதல்வர் மீண்டும் மீண்டும் கடிதம்.! செவி சாய்க்காத மத்திய அரசு..!!

MK Stalin
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும்.

இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கடிதம் எழுதினாலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.