1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (12:33 IST)

மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள்.. 13 மீனவர்கள் கைது குறித்து டிடிவி தினகரன்..!

தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
 
கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 
எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். 
 
Edited by Mahendran