புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (16:52 IST)

“விஜய் கட்சி கூட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி” - கேள்வி கேட்டதால் தனியறையில் அடைத்த பவுன்சர்கள்.!!

TVK Meeting
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கேள்வி எழுப்பிய பெண் ஒருவரை,  பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள், தனியறையில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது புஸ்ஸி ஆனந்த் மேடையில் பேசி கொண்டிருந்த போது, புஷ்பா என்ற பெண் ஒருவர், எங்க அண்ண இருக்குற சொத்தை வித்து விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தார். ஆனால் இப்போ அவர ஏன் கட்சியில இருந்து ஒதுக்கி வச்சிருக்கீங்க என கேள்வி எழுப்பினார்.
 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பவுன்சர்கள், நியாயம் கேட்டு முறையிட்ட புஷ்பாவை மண்டபத்தில் இருந்த தனியறையில் அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி, வீடியோ எடுக்க கூடாது என்று பவுன்சர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. 
 
விஜய் மக்கள் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக தங்கத்துரை இருந்து வந்திருக்கிறார்.  அவரது நிலத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்ததாகவும், ஆனால் மக்கள் இயக்கம், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக மாறிய பிறகு தங்கதுரைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

 
அதனால்தான் தங்கதுரையின் சகோதரி புஷ்பா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனைந்திடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய போது, பவுன்சர்களால் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.