ஃபேஸ்புக் மூலம் ஆண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நடிகை
கோவையை சேர்ந்த ஸ்ருதி என்பவர் தமிழ் சினிமாவில் சிறுசிறு கேரக்டரில் நடித்த ஒரு நடிகை. இவர் தனது ஃபேஸ்புக் மூலம் பல ஆண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளதால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபேஸ்புக்கில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்யும் ஸ்ருதி, முதலில் ஆண்களிடம் நட்புடன் சேட்டிங் செய்வார். பின்னர் அவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனக்கு தேவையானவற்றை வாங்கித்தரும்படி கோருவார். இவரது அழகிலும் தொலைபேசி பேச்சிலும் மயங்கிய ஆண்கள் ஸ்ருதிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர்கள் தான்
இந்த நிலையில் இவரிடம் ரூ.45 லட்சத்தை இழந்த இளைஞர் ஒருவர் கோவை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீசார் ஸ்ருதி, அவரது தாயார் மற்றும் ஒருவர் என மூவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் அவர் கோடிக்கணக்கில் பல ஆண்களிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் அவரது ஃபேஸ்புக் கணக்கையும் போலீசார் முடக்கியுள்ளனர்.. ஸ்ருதி கைது செய்யப்பட்டதை அடுத்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.