வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (16:37 IST)

சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

சசிகலா அதிமுக என்ற போர்வையில் சுற்றக்கூடாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிகலாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் சசிகலா அதிமுகவினர் உரையாடல் நடந்துகொண்டுதான் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலா மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு ‘சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என எல்லோரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதன் பின்னரும் அவர் கட்சியில் சேர நினைப்பது அழகல்ல. அவருக்கு என்ன நிர்பந்தம் என்று தெரியவில்லை. அவர் ஒரு கட்சியை தொடங்கினால் யாரும் கேட்க முடியாது. ஆனால் அதிமுக என்ற பெயரில் வரக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம். கட்சியில் சேர்க்க மறுத்த பின்னர் நான் அந்தக் கட்சிக்கு செல்வேன்,‌ கட்சி நடத்துவேன் என்று சொல்வது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.