செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (11:31 IST)

ஹெச்.ராஜாவை கோர்ட்டே பாத்துக்கும் - டெல்லியிடம் பணிந்த எடப்பாடி?

காவல்துறை மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய கெடுபிடி காட்ட வேண்டாம் என காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு போலீசார் தடை விதித்த போது காவல் துறை மற்றும் நீதித்துறை மீது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சேறை வாறி வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
ஹெச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது, சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினரிடையே மோதலை தூண்டியது என மொத்தம் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், தற்போதுவரை ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை. நேற்று கூட திண்டுகல்லில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஹெச்.ராஜா தலைமறைவு என செய்தி வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்திதாளை பாஜக தொண்டர் ஒருவர் மேடையிலிருந்து காட்டி ஏளனம் செய்தார்.

 
குட்கா விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தில் சிபிஐ ரெய்டு நடத்திய கோபத்தில் முதலில் வேகமாகவும், கோபமாகவும் செயல்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்யுங்கள் என கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதையடுத்தே 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. 
 
இதையடுத்து, டெல்லி பாஜக தலைமையிடமிருந்து உடனடியாக தொலைபேசி அழைப்பு பழனிச்சாமிக்கு போயிருக்கிறது. ஹெச்.ராஜா பற்றி உங்களுக்கு தெரியும்.. இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுங்கள் எனக் கூற, எடப்பாடி பிடிகொடுக்கவில்லை.. அவர் இஷ்டத்துக்கு பேசுவாரு. நாங்க அமைதியா இருக்கனுமா.? அவர கைது செய்ய சொல்லிவிட்டேன். இது நடக்கும் என கோபமாக பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம். 
 
அதன் பின்னும் டெல்லியிலிருந்து சில தொலைப்பேசி அழைப்புகள் அவருக்கு போயிருக்கிறது. அதன் பின் பணிந்த முதல்வர், கமிஷனரை அழைத்து, நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது. எனவே அவரை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். நாம எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என உத்தரவிட்டாராம். எனவேதான், இதுவரை ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்யவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஹெச்.ராஜாவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. எனவே, அவரை கைது செய்ய தேவையில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.