தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணம் இருமடங்கு உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் புதியதாக மின் இணைப்பு வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணம், பதிவுக்கட்டணம், வளர்ச்சி கட்டணம், பாதுகாப்பு கட்டணம் ஆகியவை அடங்கிய மின்இணைப்புக்கான தொகையை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மனு அளித்த நிலையில் தற்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் பின்வருமாறு:
வீடுகளுக்கு மின் இணைப்பு பெற இதுவரை ரூ.250 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது அது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வீடுகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தப்பட்டுள்ளது
பொது குடிநீர் இணைப்பு, பொது பயன்பாட்டு விளக்குகளுக்கான கட்டணம் ரூ.250 மட்டுமே இருந்த நிலையில் அக்கட்டணம் தற்போது ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. இதே பிரிவில் மும்முனை இணைப்பு பெற ரூ.500 மட்டுமே கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.750 முதல் ரூ.1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது
வணிக நிறுவனங்கள், கடைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு புதியதாக மின் இணைப்பு பெற ரூ.250 மட்டுமே கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.500 ஆகவும் இதே பிரிவிற்கு மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது
அதேபோல் விசைத்தறி கூடங்கள், குடிசைத்தொழில்கள் ஆகியவைகளுக்கு புதிய மின் இணைப்பு பெற கட்டணம் ரூ250 மட்டுமே இருந்த நிலையில் தற்போது அதுவும் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750 ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் இணைப்பு பெற கிட்டத்தட்ட இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றாலும், நஷ்டத்தில் இயங்கி வரும் மின்சாரத்துறை கொஞ்சம் தேறிவரும் என கூறப்படுகிறது