உயர்கல்வி கட்டண உயர்வு … ஸ்காலர்ஷிப் கட் - ஐஐடி அதிரடி முடிவு !
இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனனங்களில் எம்.டெக் படிப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டெல்லியில் சமீபத்தில் சந்தித்து ஆய்வை நடத்தியது. அப்போது எடுக்கப்பட்ட சில முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்பான எம்.டெக் படிப்பதற்கான கட்டணம் முன்பிருந்ததை விட 10 மடங்கு உயரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது ஐஐடிகளில் முதுகலைப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வால் இந்த கட்டணம் 2 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. அதுமட்டுமில்லாமல் கேட் தேர்வு எழுதி தகுதிப் பெற்று சேரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகையான 12,400 ரூபாயையும் நிறுத்த ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஐஐடி கவுன்சிலின் இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.