புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (11:19 IST)

தங்க தமிழ்ச்செல்வனைக் குறிவைக்கும் தேர்தல் ஆணையம் – அறையில் சோதனை !

தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக கருத்துகளைப் பேசிவரும் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். இதில் தவறில்லை தங்க தமிழ்செல்வன் எதார்த்தத்தை பேசுகிறார் என டிடிவி தினகரனும் குறிப்பிட்டிருந்தார். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினர் குழப்பத்தில் ஈடுபடலாம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

இதையடுத்து அவர் திருப்பரங்குன்றம் தேர்தல் பணிகளுக்காக தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அறையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணம், பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் அறையில் இருந்து பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜகவை விமர்சனம் செய்வதால் தங்க தமிழ்ச்செல்வன் மீது தேர்தல் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.