வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:23 IST)

உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம் !

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவித்துள்ளது. தேர்தலுக்காக  30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. இதனால் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது