தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கா? – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவித்த போதும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தது. எனினும் பல இடங்களில் மக்கள் கொரோனா விழிப்புணர்வின்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்காலிக பொறுப்பில் இருக்கும் அரசு ஆட்சியே நடைபெறும் என்ற நிலையில் கொரோனா காரணமாக முதல்வர் முக்கிய முடிவுகள் எடுக்க தேர்தல் ஆணையம் தளர்வுகள் வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொரோனா கட்டுக்குள் வராவிட்டால் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல்வர் இதுகுறித்த முடிவை எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.