வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (14:10 IST)

பொறுப்புள்ள எதிர்கட்சியாக மழையில் பாதித்த மக்களுக்கு உதவுவோம்! - பாமக தொண்டர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்!

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பாமகவினர் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கோவை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது

 

இந்நிலையில் பாமக தொண்டர்களுக்கு எக்ஸ் தளம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ”தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை, மதுரை, கோவை என  மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக பாதிப்புகளையும், சிரமங்களையும் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
 

 

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இடர்ப்பாட்டுக் காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டியது  பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை. அதன்படி மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இயன்றவரை அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் பா.ம.க.வினர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K