வட்டமடிக்கும் எக்ஸ் மினிஸ்டர்; கண்டுக்கொள்ளாத ஈபிஎஸ்: கட்சி தாவல் உறுதியா?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி பறிக்கப்பட்ட மணிகண்டனை கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் அவர் கட்சி மாறுவது குறித்து பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை அதிரடியாக பறித்தார். அதன் பின்னர் அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கவனித்து வருகிறார். இதனிடையே அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக பேச்சுக்களும் வெளியாகியது.
ஆனால், இந்த பதவி பறிப்புக்கு பின் மணிகண்டன் முதல்வரை சந்தித்து பேசி மன்னிப்பு கேட்டு இழந்த பதவியை மீண்டும் வாங்கிட வேண்டும் என முயற்சித்து வருகிறார். ஆனால், இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
எனவே, மணிகண்டன் கட்சி மாறுவது உறுதி என கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து மணிகண்டனே பேட்டி அளித்துள்ளார். மணிகண்டன் கூறியதாவது, நான் இன்னமும் சென்னையில்தான் இருக்கேன். தலைமையின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் திமுகவுக்கு போகப்போறேன், அமமுகவிலிருந்து என்னை அழைக்கின்றார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறது. மக்கள் செல்வாக்கு இருக்கிற என்னை பல கட்சிக்காரர்கள் அப்ரோச் செய்வார்கள். ஆனால் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. நான் கடைசி வரை அதிமுக-வில்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.