செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (10:48 IST)

அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்! – திமுக துரைமுருகன் கண்டனம்!

தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் திமுகதான் என அமைச்சர் ஜெய்க்குமார் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என எதிரக்கட்சியான திமுக குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் “தமிழகத்தில் கொரோனா பரவ காரணமே திமுகதான்” என பேசியது திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் ”எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதை சமாளிக்க திமுகவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். கேரளா வரை கொரோனா வந்த பிறகும் திண்டுக்கலில் மக்களை கூட செய்து விழா கொண்டாடிக் கொண்டிருந்த அதிமுகவினர் மீது நாங்களும் பழி போடலாம்தான். ஆனால் அமைச்சரை போன்ற அரைவேக்காட்டுத்தனமான செயல்களை செய்ய நாங்கள் விரும்பவில்லை” என்று பதிலடியாக பேசியுள்ளார்.

மேலும் தன்னார்வலர்கள் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க விதிக்கப்பட்டுள்ள அரசின் தடையை திரும்ப பெற வேண்டுமென்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.