செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (15:47 IST)

உங்க தோட்டத்து டேஸ்ட்டு யானைகளுக்கு பிடித்துவிட்டது – கலாய்த்த சீனிவாசன்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் “யானைகள் காட்டை விட்டு வெளியேறி தோட்டங்களை துவம்சம் செய்து வருவது அதிகரித்துள்ளது. காட்பாடியில் உள்ள எனது தோட்டத்திலேயே யானைகள் மூன்று முறை புகுந்துள்ளன. நான் ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை நாசம் செய்துவிட்டன. சரி போகட்டும் என முருங்கை தோட்டம் போட்டேன் அதையும் துவம்சம் செய்துவிட்டன” என்று கூறினார்.

அவருக்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனை போலவே அவரது தோட்டமும் வளமாக இருப்பதால் யானைகள் ருசி அறிந்து வந்திருக்கின்றன” என நகைச்சுவையாக குறிப்பிட்டதால் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்துள்ளது.

பிறகு பேசிய அவர் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.