1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , வெள்ளி, 31 மே 2024 (11:22 IST)

குடிபோதையில் மினி பஸ்-ஐ இயக்கி,சாலை ஓரம் நின்றிருந்த இளைஞர்கள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்(19).தேனி முல்லை நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (21). ஹரிஹரன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக தேனி வெற்றி திரையரங்கம் எதிரே உள்ள மர அறுவை மில்லில் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
 
அவருடன் முல்லை நகரைச் சேர்ந்த அழகர்சாமியும் வேலை செய்து வந்தார்.
 
இந்த நிலையில்  அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கி விட்டு  சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் அருகே நின்றிருந்த போது,தேனியில் இருந்து பூதிப்புரம் நோக்கி வந்த தனியார் மினி பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்து இளைஞர்கள் மீது மோதியது 
இதில் இரண்டு இளைஞர்கள் மீதும் தனியார் மினி பேருந்து ஏறியதில் ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
 
படு காயங்களுடன் மீட்கப்பட்ட அழகர்சாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
ஹரிஹரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
 
மினி பேருந்தை ஓட்டி வந்த அஜித்குமார் என்பவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
பேருந்தை இடது புறமாக திரும்பிய போது, சாலையோரம் நின்றிருந்த இளைஞர்கள் மீது மினி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
விபத்து நடந்ததும் மினி பேருந்து ஓட்டுனர் அஜித்குமார் பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியதாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் அப்பகுதியில் விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 
ஆனால் காவல்துறை தரப்பில் ஓட்டுனர் அஜித்குமாருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
 
மினி பேருந்து உரிமையாளர் பூதிப்புரம் அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த  திமுக முக்கிய பிரமுகர் என்று கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததை மறைத்து,அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட விபத்து போல் சித்தரிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
மேலும்
பேருந்து ஓட்டுநர் இளைஞர்கள் மீது பேருந்தை ஏற்றியதில் கூலி வேலைக்குச் சென்றாவது கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று கல்லூரி கனவோடு உழைக்கச் சென்ற ஒரு இளைஞரின் உயிரை பழிவாங்கி இருப்பது அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.