1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , வெள்ளி, 24 மே 2024 (15:36 IST)

பல்லாங்குழி சாலைகளால் பதறும் வாகன ஓட்டிகள்

தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
 
குறிப்பாக கேரள மாநிலத்திற்கு தேனி மாவட்டம் வழியாக செல்பவர்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
 
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.
 
மேலும் தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த வழியாகத்தான் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
 
இந்த நிலையில் தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல காட்சியளிக்கிறது.
 
குறிப்பாக அரண்மனைப்புதூர் பிரிவிலிருந்து மதுரை சாலை மற்றும் கம்பம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளங்கள் ஏற்பட்டு அவற்றில் நீர் தேங்கி குண்டும் குழியுமாகவும்,சேரும் சகதியமாகவும் இருப்பதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மரண பீதி ஏற்படுகிறது.
 
குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலமுறை கீழே விழுந்து பாதிக்கப்படும் அவலமும்,கை,கால் முறிந்த அனுபவமும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த வழியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக செல்ல வழி இல்லாமல் இந்த பல்லாங்குழி சாலையில் மிகவும் மெதுவாக செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் நோயாளிகளின் உயிருடன் விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலையைக் கடக்க முயலும் போது,வேகமாக செல்ல வழி இல்லாத காரணத்தால் மிகப்பெரிய அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தேனி நகரமே திணறி வருகிறது.
 
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நாள்தோறும் பலமுறை இந்த வழியாகத்தான் கடந்து செல்கிறார்கள்.
 
ஆனால் பொது மக்களின் நலன் மீது சிறிதும் அக்கறை இல்லாததால் இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் அலட்சியமாக சொகுசு காரில் பயணிப்பதால் அவர்களுக்கு சாதாரண மக்கள் படும் அல்லல்கள் குறித்து தெரியாமல் போகிறதோ, என்னவோ.
 
தேனி மாவட்டத்தைச் சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை குரங்கணி, கொழுக்குமலை மற்றும் கேரளாவின் மூணார் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பாதைகளில் ஆபத்தான சாலைகளில் ஆஃப் ரோடு சபாரி என்கிற பெயரில் ஜீப்புகளில் சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதுண்டு.அந்த ஆஃப் ரோடு சபாரி அனுபவத்தை தனுஷ்கோடி கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அதுவும் தேனி நகரிலேயே வழங்கி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறதோ நெடுஞ்சாலைத் துறை.
 
ஏற்கனவே பழைய ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழத்திற்கு போடக்கூடிய பரிதாப நிலையில் இயங்கி வரக்கூடிய பிங்க் நிற பழைய நகர பேருந்துகள் இந்த படுகுழிகள் வழியாக செல்லும் போது நகரப் பேருந்துகள் பல நகர பேருந்துகளாக நிரந்தரமாக மாறி முடங்கி விடுகின்றன.