1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (14:37 IST)

உதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கியது அம்பலமாகியுள்ள நிலையில் இதற்கு காரணமான துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முறைகேடுகளையும், விதிமீறல்களையும் அம்பலப்படுத்தி வந்த அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் கி. பிரேம்குமார்,  பாலியல் புகார் உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதலில் பணியிடை நீக்கமும், பின்னர் 18.05.2023 நிரந்தர பணிநீக்கமும் செய்யப்பட்ட நிலையில்,  அதற்காக பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்த முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து பிரேம்குமார் மீதான பணிநீக்க நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது. இதன்மூலம் அறம் வென்றுள்ளது.
 
பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. பல்கலைக்கழக நிர்வாகத்தின் முரண்பட்ட செயல்பாடுகளில் இருந்து அவை உறுதியாகியுள்ளன. உதவிப் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் குறித்து அவரிடம்  விளக்கம் கேட்ட பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால்,  பிரேம்குமாரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் 18.05.2023 அன்று பணிநீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகம், அதன்பின் 05.06.2023 அன்று தான் அவரிடம் விளக்கம் கேட்டு  குறிப்பாணை அனுப்பியுள்ளது. இந்த அப்பட்டமான தவறு வெளியானதைத் தொடர்ந்து தான்  அவர் மீதான நடவடிக்கையை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
 
பிரேம்குமாரை பணிநீக்கம்  செய்ய தீர்மானித்த ஆட்சிக்குழு கூட்டத்தில் அப்போதைய உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயனும் கலந்து கொண்டிருக்கிறார். பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுகள், விசாரணைகள் குறித்து எந்த விவாதமும் நடத்தாமல் பணிநீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். அதன்மூலம் பல்கலைக்கழக பழிவாங்கல் நடவடிக்கைக்கு அவர் துணை போயிருக்கிறார்.  பெரியார் பல்கலைக்கழக  துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோரின் தவறுகளை தண்டிக்க வேண்டிய உயர்கல்வித்துறை செயலாளர்,  அவர்களுடன் சேர்ந்து நியாயம் கேட்டு போராடியவர் மீது நடவடிக்கை எடுக்க துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது.
 
பல்கலைக்கழகங்களில் ஊழல்களும்,  முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை அம்பலப்படுத்துபவர்களை பொய்யான புகார்களின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் பணி நீக்குவதை அரசு அனுமதித்தால் சட்டத்தின் ஆட்சி என்பதே கேலிக்குரியதாகி விடும்.  எனவே, பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகளை அம்பலப்படுத்திய உதவிப் பேராசிரியரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கிய  அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்,  பதிவாளர் மற்றும் அப்போதைய உயர்கல்வித்துறை செயலாளர் மீது தமிழக அரசும், ஆளுனரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
Edited by Mahendran