திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (11:37 IST)

இந்தி தேசிய மொழியும் அல்ல... இந்தி இந்தியாவை இணைக்கவும் இல்லை; டாக்டர் ராமதாஸ்..!

இந்தி தேசிய மொழியும் அல்ல... இந்தி இந்தியாவை இணைக்கவும் இல்லை; அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தில்லியில் நடைபெற்ற மத்திய நலவாழ்வு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, “மாநில மொழிகளை நாம் பேசினாலும், தேசிய மொழி என்ற அடிப்படையில் இந்திக்கு மரியாதை அளிக்க வேண்டும். இந்தி மொழி தான் நமது தேசியத் தன்மையை உருவப்படுத்துகிறது; தேசிய ஒற்றைத் தன்மைக்கும், ஒற்றுமைக்கும் இந்தி மொழி தான் பாலமாக செயல்படுகிறது என்பதால் அனைவரும் இந்தியில் பேச வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இது மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சக பணியாளர்கள் மீதான இந்தித் திணிப்பு ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவதைப் போன்று இந்தி நாட்டின் தேசிய மொழியும் அல்ல; அது இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இல்லை. இந்தி மொழி என்பது நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான். எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல்மொழி என்ற நிலையை அடைவதற்கு தகுதியானவை தான். தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒரே அளவில் வைத்து மதிக்கப்பட வேண்டும். மாறாக மற்ற மொழிகளை புறக்கணித்து விட்டு, இந்தி மொழிக்கு மட்டும் முதன்மைத்துவம் அளித்தாலும், இந்தி பேசாத மக்கள் மீது திணித்தாலும் அது மக்களிடம் பிளவைத் தான் ஏற்படுத்தும் என்பதை மத்திய அமைச்சர் மாண்டாவியா உணர வேண்டும்.
 
மத்திய அரசின் அலுவல்கள் முழுக்க முழுக்க இந்தியில் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்கள் (Hindi Salahkar Samiti) ஏற்படுத்தப்பட்டிருப்பதே இந்தியை திணிக்கும் செயல் தான். ஒரு மொழிக்கு மட்டும் முதன்மைத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது. இந்தி ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, ஆண்டுக்கு இரு முறை அதன் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும்  இந்தியைத் திணிக்கும் செயல் தான். பிறமொழி பேசும் மக்களுக்கு எதிரான இந்த  அமைப்புகளை உடனடியாக மத்திய அரசு கலைக்க வேண்டும்.
 
மத்திய அரசின் அலுவல்களில் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். அதற்காக, இந்தித்திணிப்பை கைவிட்டு விட்டு,  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள  தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
 
Edited by Siva