1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (07:40 IST)

முடிவுக்கு வந்தது மருத்துவர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து இந்த போராட்டத்தை தள்ளிவைப்பதாக மருத்துவர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
 
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப்பணியிடங்கள் நிரப்புதல், போன்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 25ந் தேதி முதல் தமிழக முழுவதும் அரசு மருத்துவர்கள், வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் காரணமாக உயிர்காக்கும் அவசர சிகிச்சை தவிர மற்ற நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐந்து நாள் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டம் செய்யும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
 
இதனை அடுத்து மருத்துவர் சங்கத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தங்கள் போராட்டத்தை தள்ளிவைப்பதாக மருத்துவர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியபோது, மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும், போராட்டத்தை கைவிட்டு இன்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.